Sunday, January 29, 2006

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் Vs. ஜாகிர் நாயக்

புனித வேதங்களின் வெளிச்சத்தில் கடவுள் கொள்கை - தமிழில் ஜன்னாமைந்தன்

பெங்களூரில் கடந்த சனிக்கிழமை (21-01-2006) அன்று Islamic Research Foundation இயக்குநரும், இஸ்லாமிய பிரச்சார பீரங்கியுமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ""Art of Living'' என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்றது.

புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்துயிசம் மற்றும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் அந்த விவாத அரங்கம் நடந்தது. மக்கள் உரிமை வார இதழுக்காக நமது சிறப்பு செய்தியாளர் ஜன்னா மைந்தன் அந்த நிகழ்ச்சியில் நேரில் பங்குகொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட அந்த நிகழ்ச்சியின் தொகுப்பை அவர் இங்கே மக்கள் உரிமை வாசகர்களுக்கு வழங்குகிறார். - ஆசிரியர்.

டாக்டர் ஜாகிர் நாயக் 1965ல் பம்பாயில் பிறந்தவர். அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர். பிறகு முழுநேர இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக தனது மருத்துவத் தொழிலை தியாகம் செய்தார். Islamic Research Foundation என்ற அழைப்புப் பணி நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் உள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் பலவற்றில் உரையாற்றி உள்ளார். சமீபத்தில் "Peace TV" என்ற பெயரில் 24 மணிநேரமும் இஸ்லாத்தை இயம்பும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியை டாக்டர் ஜாகிர் நாயக் தொடங்கியுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமிழகத்தில் உள்ள பாபநாசத்தில் 1956ல் பிறந்தவர். இவர் 1982ல் "Art of Living' (வாழும் கலை) என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பு 144 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. யோகாசனத்தை ஈலகம் முழுவதும் பரப்பி வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு நலப்பணிகளை ஆந்த அமைப்பு செய்து வருகிறது. 25,300 கிராமங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய அரசு சாராத அமைப்பாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிறுவியுள்ள அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பெங்களூர் பிரபல பேலஸ் மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல மாநாடுகளை, கருத்தரங்குகளை, கண்காட்சிகளை தன்னகத்தே அமைத்துக் கொண்ட சிறப்பு பேலஸ் மைதானத்துக்கு உண்டு. ஆனால், அந்த சனிக்கிழமை மாலை ஒரு புதிய வரலாற்றை அந்த மைதானம் அரங்கேற்றிக் கொண்டிருந்தது. ஒளிவிளக்குகள் அந்த மாலைப் பொழுதை வெளிச்சமாக்கியிருந்தன. அமர்வதற்கு இடமின்றி வி.ஐ.பி. பாஸ்கள் பெற்றவர்கள் கூட அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

பிரம்மாண்டமான கிரேன்களில் வீடியோ கேமிராக்கள் மேலும் கீழும் நகர்ந்து கொண்டே படம்பிடித்து உலகம் முழுவதும் காட்சிகளை அனுப்பிக் கொண்டிருந்தது. ஆம் இஸ்லாமிய அழைப்புப் பணி வரலாற்றில் முதன் முறையாக இந்தக் விவாத அரங்கம் நேரடியாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள Peace தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது.



நமது தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயாமொழியைச் சேர்ந்த உமர் ஷரீப் தலைமையில் பெங்களூரில் இயங்கும் "டிஸ்கவர் இஸ்லாம் எஜுகேஷனல் டிரஸ்ட் நிறுவனம் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பான முறையில் எற்பாடு செய்திருந்தது.

முதன்முறையாக இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான டாக்டர் ஜாகிர் நாயக்கும், உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடையே பிரபலமாக இருக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் அந்த விவாதத்தில் எப்படி வாதங்களை எடுத்துரைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவரது உள்ளத்திலும் பொங்கியெழுந்த வேளையில் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த டாக்டர் முஹம்மது நாயக், முதலில் விவாத நடைமுறைகளை எடுத்துரைத்தார். டாக்டர் ஜாகிர் நாயக் விவாதத்தை தொடங்கி வைத்து முதலில் 50 நிமிடங்கள் உரையாற்றுவார் என்றும், பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 60 நிமிடங்கள் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார் என்றும் அவர் அறிவித்தார்.

அதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக் 10 நிமிடங்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுவார் என்றும் முஹம்மது நாயக் தெரிவித்தார். இதன்பிறகு இரண்டு அறிஞர்களும் திரண்டிருக்கும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என்றும் அறிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து டாக்டர் ஜாகிர் நாயக் தனது உரையை ஆரம்பித்தார்.

நன்றி: மக்கள் உரிமை வார இதழ்

No comments: