Sunday, February 12, 2006

பிப்ரவரி-14 : கலாச்சார/பண்பாட்டுச் சீரழிவு தினம்

தினம் தினம் ஒரு கொண்டாட்டம். இது 'கே' டிவி விளம்பரமல்ல! உலகமயமாக்கப்பட்ட சாமான்யனின் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயரிட்டு, அந்தத்த துறைசார் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள முதலாளியத்துவம் கையாண்ட வணிக யுக்திகளில் ஒன்றுதான் காதலர் தினம்.

'காதல்' என்ற உணர்வு அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது. காதல்/நேசம்/அன்பு/பாசம் இப்படி எந்த பெயர் கொண்டழைத்தாலும் இதன் அர்த்தம் மாறுவதில்லை.

அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என்று எத்தனையோ தினங்கள் அன்பை வெளிப்படுத்தக் கொண்டாடப் பட்டாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு இருக்கும் உலகலாவிய முக்கியத்துவமும் எதிர்ப்பும் வேறு தினக் கொண்டாட்டங்களுக்கு இல்லை.

காதலர் தினக் கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்கள், அன்புக்கும் காதலுக்கும் எதிரிகளா? இல்லை! ஆணும் பெண்ணும் சமூக அங்கீகாரமற்ற அநாகரிக உறவு கொள்வதற்கும், கொண்டாட்டம் என்ற பெயரில் கலாச்சார/ பண்பாட்டுச் சீரழிவிற்கும் வழிவகைச் செய்வதையும்தான் எதிர்க்கிறார்கள்.

("கலாச்சாரக/பண்பாட்டுக் காவலர்கள்" என்ற போர்வையில் ஆர்ப்பரிக்கும் வன்முறைக் கும்பலின் நோக்கம், இக்கொண்டாட்டங்களுக்கு கிறிஸ்தவ பின்னனி இருப்பதாலும், கலர்ப் பொடித்தூவி மகிழும் "ஹோலி,ரக்ஷ்சா பந்தன்" கலாச்சாரத்திற்கு! எதிரானது என்ற சுய நலமத்தாலும்தான். அதைப் பற்றிய விவாதம் இங்கு அவசியமில்லை)

இந்தியாவில் கடந்த 10-20 வருடங்கள் வரை அறிந்திராத "காதலர் தினம்" எங்கிருந்து வந்தது? இதற்கு முன் இந்தியர்கள் காதலிக்காமலா இருந்தார்கள்? இரு உள்ளங்களுக்குள் இருக்க வேண்டிய காதலை ஒயின் ஷாப்பிலும், கேளிக்கை நடன விடுதியிலும், கடற்கரையிலும் கடை விரித்துக் கொண்டாடும் கலாச்சாரம், இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய ஒழுக்கச் சீர்கேட்டின் பலனல்லவா?

ஒரு இணையதமிழ் குழுமத்தில் "காதலர் தினம் தமிழருக்குத் தேவையா?"
என்ற விவாதத்தில் அருமையான கருத்துப் பரிமாற்றத்தைக் காண நேர்ந்தது.

"கல்வி, செல்வம், வீரம், விழுமியம், காதல் என்று தன் வாழ்வை வளப்படுத்திய தமிழன் அவற்றை மதிக்கவும் வளர்க்கவும் கற்றுக்கொடுக்க மறுக்கவில்லை..மறக்கவில்லை...!

ஆனால் நாம் எப்போதுமே காதல் என்ற ஒன்றுக்காக விழா எடுத்து காலத்தை வீணடிக்கவில்லை...செலவை ஊக்குவிக்கவில்லை..காதல் பண்டமல்ல பரிமாறி மகிழ என்று உணர்த்தவும் இல்லை..அதைக் கேளிக்கையாக்கி காட்டவும் இல்லை...மனிதனுக்குள் உருவாகும் ஒரு உன்னத உணர்வாகவே காட்டி வந்தோம் தொன்றுதொட்டு...! இதற்கு தமிழ் இலக்கியங்கள் சாட்சி"

காதல் அது ஒருவன் ஒருத்திக்குள் உருவாகும் உணர்வுநிலைப் பரிமாற்றத்தின் விளைவு...அதை அவளும் அவனும் தான் சரிவர உணர முடியும்...! அதை ஏன் மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்...அதற்கு ஏன் ஒரு விழா...திருநாள்...இதைக் கொண்டாடாமல் விட்டால் காதல் என்ன மனிதனுக்குள் உயிரிக்குள் உதயமாகாமலா விட்டிடும்...???!

காதல் புனிதம் ஆவதும் அசிங்கமாவதும் காதலர் தினம் கொண்டாடுவதால் அல்ல...தினம் தினம் உங்கள் உங்கள் மனம் எடுக்கும் நிலை சார்ந்ததே அது...! பூக்கள் கொடுப்பதும் பரிசு கொடுப்பதும் பொது இடத்தில் முத்தம் கொடுப்பதும் கட்டிப்பிடிப்பதும் காதலைப் புனிதமாக்காது...அது காதலும் அல்ல..!

காதல் அகத்தோடு இப்பது உடல் கூட அதை வெளிக்காட்டாத போது நீங்க ஏன் அதை கேளிக்கையாக்குகிறீர்கள்...! இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???!

மேற்குலக வியாபாரிகளுக்கு ஜீவிய கால விளம்பரம் ஓட்ட கிடைத்த ஒன்றுதான் காதல்... தவறாமல் பிடித்துக்கொண்டுள்ளார்கள்...உலகம் பூராவும் நல்ல காதல் வியாபாரம் நடக்கிறது...! காதல் இன்று வியாபாரமாகி இருப்பது இத்தினத்தால் மேலும் விளம்பரப்படுத்தப்படுகிறது...! இது காதலைப் புனிதப்படுத்தவில்லை களங்கப்படுத்துகிறது...!

ஆண் - பெண் காதலுக்கும் பாசம் கலந்த அப்பா அம்மா சகோதரங்கள் மீதான காதலுக்கும் இடையே உணர்வு ரீதியான தெளிவான வேறுபாடுண்டு...! காதலை வெளிப்படுத்த காதல் கொண்டவங்களுக்கு நாள் நட்சத்திரம் அவசியமில்லை...! காதல் ஒரு நாளுக்குரியதுமல்ல...அது வாழ்வின் எல்லை வரை தொடர வேண்டியது...! ஏன் புறத்தே வேசங்களால் வெளிக்காட்டாமலே காதலை அன்பால் காட்டிக் கொண்டே இருக்கலாம். அதுதான்... யதார்த்தமானது... உண்மையானது...!

காதலுக்கு... அன்பைப் பொழிய ஏன் ஒயின் குடிக்கவேணும்...இல்ல பியர் அடிக்க வேணும்...இல்ல...இப்படிப் பலதும் பண்ண வேணும்... காதல் மகிழ்ச்சி என்பது அன்பைப் பரிமாறுவதால் உளத்தால் எழுவது...அதற்கேன் வெளிவேசம்....தேவையில்லாத வேடங்கள்...!

சிலர் இதே தினத்தை ஏதோ காதலுக்கு சுதந்திரம் தரும் தினமாகக் கருதி...பச்சை நிற ஆடைகள் அணிந்து கட்டாயக் காதல் வரவழைக்கினமாம்...இன்னும் சிலர் செய்ய வேண்டிய சேட்டைகளை செய்து போட்டு இது லவேர்ஸ் டே எதுக்காடி இருக்கு என்றாங்க...இதுதான் காதலர் தினம் தரும் விளைவுகளோ...இதுதான் புனித நாளின் பணிகளோ...!

இப்போ தியாகிகள் நாளை கூத்தும் கும்மாளமுமா அடிக்கச் சொன்னா அதை அங்கீகரிப்பீங்களோ... அதேபோற்தான் காதலுக்காய் தியாகம் பண்ணினவன் காதலுக்கு மரியாசை செய்யச் சொன்ன நாள் தான் இது...ஆனா...அதுவா நடக்குது...இதுதான் மரியாதை செய்யும் நடைமுறைகளோ...??!
மனித உணர்வுகளில் காதல் இன்றியமையாதது. உயிர்களுக்குள் காதல் பரிமாற்றம் அவசியம். ஆனால் திருமணம் என்ற சமூக அங்கீகாரத்துடன் என்பதே இஸ்லாமிய/இந்திய/தமிழர் பண்பாடு.

பிப்ரவரி-14 ஆம் தேதியை உலகம் முழுவதும் காதலர் தினமாக அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் பிப்ரவரி முதல் நாளிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் படுகின்றன. புத்தாண்டையாவது நள்ளிரவில் கொண்டாடுவதில் கொஞ்சம் நியாயம் உண்டு. காதலர் தினக் கொண்டாட்டங்களும் இரவில் நடப்பது என்பது ஏன்? என்று சிந்தித்தால் இதன் உள்நோக்கம் புலப்படும்.

ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தால் எப்படி அன்பை வெளிப் படுத்திக் கொள்வார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. MTV வின் வருகைக்குப் பிறகு காதலர் தினக் கொண்டாட்டங்கள் தரம் தாழ்ந்தன. மது அருந்திவிட்டு ஆணும் பெண்ணும் கும்பலாக நெருக்கியடித்து உரசிக் கொண்டும், ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டும், முத்தமிட்டும் ஆடி மகிழ்வதுதான் காதலுக்கு மரியாதையா?

காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு வக்காளத்து வாங்குபவர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி பொது இடங்களில் அநாகரிகமாக ஒழுக்கக்கேடாக நடப்பதை அனுமதிப்பதில்லை. காதலுக்கு மரியாதை என்ற பெயரில் மறைந்திருக்கும் தங்களுன் உள்மன வக்கிரத்தைக் காட்டவே எண்ணமே காதலர் தினக் கொண்டாட்டங்கள் என்றால் மிகையில்லை.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக் கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (குர்ஆன் 17:32)

Monday, February 06, 2006

A.R.ரஹ்மானின் பிறந்தநாள் பரிசு

திலீப் குமாராக இருந்து இசைப்புயல் A.R.ரஹ்மானாக மாறியவரின் வாழ்க்கைப் பயணத்தில் இஸ்லாமியத் "தென்றல்" வீசிய அனுபவங்களையும், இன்றைய முஸ்லிம்களின் நிலையையும் பிரபல அரப் நியூஸ் பத்திரிக்கையாளருடன் பகிர்ந்து கொண்டதை மொழியாக்கம் செய்து நாமும் பகிர்ந்து கொள்வோம்.

A.R.ரஹ்மான் சமீபத்தில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். மனதை மயக்கி இறை வழிபாட்டிலிருந்து தன்னியல்பை மறக்கச் செய்யும் எதையும், அது கலை என்ற பெயரில் சொல்லப்படும் இசையாகவே இருந்தாலும் இஸ்லாம் விரும்பவில்லை. (இதுபற்றி பிறகு பார்ப்போம்)



இந்திய மற்றும் உலக இசையில் தனக்கென தனி வெற்றி நாதங்களை இயற்றியவரின் உள்மன அகவலோசை இனிமையானது.

"இந்திய சினிமா உலகில் வெற்றி பெறுவதற்காக, தன் இஸ்லாமியப் பெயரை, இந்துப் பெயராக அல்லது வேறுபெயராக மாற்றிக் கொள்பவர்களிலிருந்து என் நிலை முற்றிலும் எதிர்மறையானது. திலீப்குமார் A.R.ரஹ்மான் ஆனதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்" என்கிறார்.

இது, A.R.ரஹ்மானுக்கு இரண்டாவது ஹஜ் யாத்திரை. இந்த முறை தன் தாயாருடன் வந்திருந்தார். மினா மற்றும் அரஃபாத்தில் இருந்த ஒவ்வொரு மணித்துளியையும் இறைவனை நினைவு கூர்ந்து "உள்மன சுத்திகரிப்பு" செய்து கொண்டிருந்தார். மேலும் அவர் சொல்வதாவது,

"இஸ்லாம் நவீனயுகத்திற்கேற்ற அமைதி,அன்பு, சகிப்புத்தன்மை கொண்ட மார்க்கம். நம்மிலிருக்கும் சிலரின் சகிப்புத்தன்மையற்ற செயல்களால் துரதிஷ்டவசமாக பழமைவாத முத்திரை குத்தப்பட்டு, அவர்களால் இஸ்லாம் களங்கப்படுத்தப் பட்டுள்ளது. இஸ்லாத்தின் உன்னத பிம்பத்தை மீள்பதிவுச் செய்ய நாம் (முஸ்லிம்கள்) முன்வரவேண்டும்" என வலியுறுத்துகிறார்.

"இஸ்லாமிய வரலாற்றைப் பற்றி அறியாமலும் அதன் உன்னத வாழ்வியல் நெறிகளை புறக்கணித்தும் இஸ்லாத்தின் மீது பிறருக்கு அச்சமேற்படுத்தும் இவர்களுக்கு எதிராகத் திரள வேண்டும்" என்கிறார்.

"முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்குள் நெடும்பயணம் செய்து, அயலாருடன் அன்பாயிரு!, அடுத்தவரை சந்தித்தால் முகமன் கூறு! இறைவனைத் தொழுவதுடன் ஈகையாக இரு! என்ற அதன் உன்னத அம்சங்களை அறிய வேண்டும்; மனித குலத்திற்கு நம் சேவை இன்றியமையாததாகும். மத/மனமாச்சாரியங்களுக்கு அப்பாற்ப்பட்ட மனிதநேயம் இன்றைய கலத்தின் கட்டாயம். இதில்தான் இஸ்லாம் நிலைத்து நிற்கிறது.

நம் நடத்தைகளின் பிரதிபலிப்பு இவ்வுலகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். முஹம்மது நபி (ஸல்...) அவர்கள் இஸ்லாத்தை பரப்ப நேர்மை,நன்னடத்தை,சகிப்புத்தன்மை என்ற ஆயுதத்தால் பரப்பினார். களங்கப்படுத்தப் பட்டுள்ள இஸ்லாத்தின் பிம்பத்தை மாற்ற இவையே தற்போதைய அவசியம்" என்றார்.

ஹஜ்ஜைப் பற்றி பேசும்போது, "அல்லாஹ் இதை நமக்கு எளிதாக்கியுள்ளான்; இதுவரை ஹஜ்ஜின் ஒவ்வொரு கிரியையும் நான் அனுபவித்துச் செய்துள்ளேன். இந்த ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக்கொள்வானாக!" என்றார். மேலும் சாத்தானுக்கு கல்லெறியும் நிகழ்வை, "உள்மனப்போராட்டத்துடன்" ஒப்பிட்டார்.

எனது பிறந்தநாள் பரிசாக (ஜனவரி-6) அல்லாஹ் இந்த ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்துள்ளான். மேலும் மதினாவில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அடங்கியுள்ள பள்ளியில் இறைவனை முழுநேரம் வணங்கிய பாக்கியம், எதனோடும் ஒப்பிட முடியாத சந்தோசமாகும்" என்றார்.

மிகுந்த வேலைப் பழுவிற்கு மத்தியிலும் இறைவனை தொழுகிறேன். நான் பிஸியான இசைக்கலைஞனாக இருந்த போதிலும், இறைவனை தொழுவதை தவற விடுவதில்லை. ஐந்துவேளை தொழுகைகளையும் அதனதன் நேரத்தில் தவறாமல் தொழுகிறேன். இதனால் மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கிறது. இது இறைவன் உலக்த்தில் மட்டுமல்ல; இறுதித்தீர்ப்பு நாளிலும் என்னுடன் இருப்பதாக நினைவூட்டுகிறது என்றார்.

1989 இல் தன் குடும்பத்தாருடன் இஸ்லாத்தில் இணைந்ததை நினைவு கூர்கிறார்."நான் மலேசியாவில் இருந்த போது, முதியவர் ஒருவர் என்கனவில் வந்து இஸ்லாத்தில் இணையும் படி சொன்னார். முதலலில் இதனை நான் பெரிது படுத்தவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் இக்கனவு வந்ததால், என் தாயாருடன் ஆலோசித்தேன். இஸ்லாத்தின் பால்தூண்டிய அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, முஸ்லிமாக அறிவுறுத்தினார். இவ்வாறாக இஸ்லாத்தை நோக்கிய என் பயணம் தொடர்ந்தது என்றார்.

"இஸ்லாத்தில் இணைவது பற்றிய என் தாயாருடனான (கஸ்தூரி என்ற கரீமா பேகம்)ஆலோசனை என் வாழ்வில் செய்யப்பட்ட மற்ற சாதாரன முடிவுகளைப்போலல்லாமல் தீர்க்கமான முடிவு; சற்று ஐயங்களுடன் என் மூன்று சகோதரிகளும் பிறகு இஸ்லாத்தில் இணைந்தனர். அவர்களுக்கான முன்மாதிராக என் இஸ்லாமிய வாழ்கை இருந்ததே காரணம்" என்கிறார்.

"எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்." (குர்ஆன் 34:6 )

நன்றி: அரப் நியூஸ்

Sunday, January 29, 2006

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் Vs. ஜாகிர் நாயக்

புனித வேதங்களின் வெளிச்சத்தில் கடவுள் கொள்கை - தமிழில் ஜன்னாமைந்தன்

பெங்களூரில் கடந்த சனிக்கிழமை (21-01-2006) அன்று Islamic Research Foundation இயக்குநரும், இஸ்லாமிய பிரச்சார பீரங்கியுமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ""Art of Living'' என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்றது.

புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்துயிசம் மற்றும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் அந்த விவாத அரங்கம் நடந்தது. மக்கள் உரிமை வார இதழுக்காக நமது சிறப்பு செய்தியாளர் ஜன்னா மைந்தன் அந்த நிகழ்ச்சியில் நேரில் பங்குகொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட அந்த நிகழ்ச்சியின் தொகுப்பை அவர் இங்கே மக்கள் உரிமை வாசகர்களுக்கு வழங்குகிறார். - ஆசிரியர்.

டாக்டர் ஜாகிர் நாயக் 1965ல் பம்பாயில் பிறந்தவர். அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர். பிறகு முழுநேர இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக தனது மருத்துவத் தொழிலை தியாகம் செய்தார். Islamic Research Foundation என்ற அழைப்புப் பணி நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் உள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் பலவற்றில் உரையாற்றி உள்ளார். சமீபத்தில் "Peace TV" என்ற பெயரில் 24 மணிநேரமும் இஸ்லாத்தை இயம்பும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியை டாக்டர் ஜாகிர் நாயக் தொடங்கியுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமிழகத்தில் உள்ள பாபநாசத்தில் 1956ல் பிறந்தவர். இவர் 1982ல் "Art of Living' (வாழும் கலை) என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பு 144 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. யோகாசனத்தை ஈலகம் முழுவதும் பரப்பி வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு நலப்பணிகளை ஆந்த அமைப்பு செய்து வருகிறது. 25,300 கிராமங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய அரசு சாராத அமைப்பாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிறுவியுள்ள அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பெங்களூர் பிரபல பேலஸ் மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல மாநாடுகளை, கருத்தரங்குகளை, கண்காட்சிகளை தன்னகத்தே அமைத்துக் கொண்ட சிறப்பு பேலஸ் மைதானத்துக்கு உண்டு. ஆனால், அந்த சனிக்கிழமை மாலை ஒரு புதிய வரலாற்றை அந்த மைதானம் அரங்கேற்றிக் கொண்டிருந்தது. ஒளிவிளக்குகள் அந்த மாலைப் பொழுதை வெளிச்சமாக்கியிருந்தன. அமர்வதற்கு இடமின்றி வி.ஐ.பி. பாஸ்கள் பெற்றவர்கள் கூட அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

பிரம்மாண்டமான கிரேன்களில் வீடியோ கேமிராக்கள் மேலும் கீழும் நகர்ந்து கொண்டே படம்பிடித்து உலகம் முழுவதும் காட்சிகளை அனுப்பிக் கொண்டிருந்தது. ஆம் இஸ்லாமிய அழைப்புப் பணி வரலாற்றில் முதன் முறையாக இந்தக் விவாத அரங்கம் நேரடியாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள Peace தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது.



நமது தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயாமொழியைச் சேர்ந்த உமர் ஷரீப் தலைமையில் பெங்களூரில் இயங்கும் "டிஸ்கவர் இஸ்லாம் எஜுகேஷனல் டிரஸ்ட் நிறுவனம் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பான முறையில் எற்பாடு செய்திருந்தது.

முதன்முறையாக இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான டாக்டர் ஜாகிர் நாயக்கும், உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடையே பிரபலமாக இருக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் அந்த விவாதத்தில் எப்படி வாதங்களை எடுத்துரைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவரது உள்ளத்திலும் பொங்கியெழுந்த வேளையில் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த டாக்டர் முஹம்மது நாயக், முதலில் விவாத நடைமுறைகளை எடுத்துரைத்தார். டாக்டர் ஜாகிர் நாயக் விவாதத்தை தொடங்கி வைத்து முதலில் 50 நிமிடங்கள் உரையாற்றுவார் என்றும், பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 60 நிமிடங்கள் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார் என்றும் அவர் அறிவித்தார்.

அதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக் 10 நிமிடங்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுவார் என்றும் முஹம்மது நாயக் தெரிவித்தார். இதன்பிறகு இரண்டு அறிஞர்களும் திரண்டிருக்கும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என்றும் அறிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து டாக்டர் ஜாகிர் நாயக் தனது உரையை ஆரம்பித்தார்.

நன்றி: மக்கள் உரிமை வார இதழ்

Saturday, January 07, 2006

போகிற போக்கில் கல்லெறிந்தவர்கள்

பழுத்த மரம் கல்லடி படும் என்ற பழமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இஸ்லாத்திற்கு நன்கு பொருந்துகிறது. கடந்த 1400 வருடங்களாக இஸ்லாத்தை கரித்துக் கொட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளன.

முஹம்மது நபியை பொய்யர், சூழ்ச்சிக்காரர் என்றெல்லாம் சொல்லி இஸ்லாமிய தூதுத்துவத்தை பொய்ப்படுத்த முயன்றவர்களால், இஸ்லாத்தின் உன்னத வாழ்வியல் நெறிகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் அணி அணியாக இணைவதை தடுக்க முடியாமல் சோர்ந்து விட்டனர்.

இஸ்லாம், கருத்துக்களால் தோற்கடிப்பட முடியாத ஒப்பற்ற மார்க்கம் என்பதை உணர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள், முஹம்மது நபிக்கு எதிரான கட்டுக்கதைகளை இலக்கிய நயத்துடனும் நவீன சிந்தனைகளுடனும் விமர்சனம் செய்வதோடு அவதூறுகளால் கடைபரப்பிய போதும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.

உலகலாவிய இஸ்லாமிய எதிர்ப்புவாதங்கள் ஒருபக்கமிருக்க, தமிழ் வலைப்பூக்களில் சில திடீர் சிந்தனையாளர்கள் தங்களின் இஸ்லாத்தின் மீதான விமர்சனத்தை பல்வேறு விதமாக விமர்சிக்கின்றனர்.

தங்கம் கூட உரசிப்பார்த்தே அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே இஸ்லாம், பிறமதங்களுடன் ஒப்பிட்டு விமர்சிக்கப் படவேண்டும் என்பது என்போன்ற வலைப்பூ பதிவர்களின் எண்ணம்.

இஸ்லாம் பற்றிய விமர்சனங்களுக்கு நியாயமான விளக்கம் கொடுத்தால் ஏற்கும் மனப்பக்குவமற்ற விமர்சனங்களையும், விமர்சகர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியாக சில தொடர் பதிவுகள் இடவுள்ளேன். (இன்ஷா அல்லாஹ்)