Monday, December 26, 2005

எயிட்ஸுக்கு மருந்து!!!

ஹோமியோபதி மருந்துக்கும் அலோபதி மருந்துக்கும் என்ன வித்தியாசம்? அலோபதி மருந்துகள் நோயை விரைவாகக் குணப்படுத்துகின்றன. ஹோமியோபதி மருந்துகள் நோயைக் குணப்படுத்த அலோபதி மருந்துகளை விட கொஞ்சம் அதிக காலம் எடுத்தும் கொண்டாலும் நோய்க்காரணிகளையும் அழித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கின்றன.


சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சி சேனலில் எயிட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தமான விளம்பரத்தைக் காண நேர்ந்தது. எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ, அத்தனை வகையிலும் விளம்பரப் படுத்துகிறார்கள்.

தாயும் வயது வந்த மகளும் பொது இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது, மகள் எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிய விளம்பரத்தைக் கவனிக்காமல் கடந்து செல்கிறாள். தன் மகளை அந்த விளம்பரத்தைக் கவனிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தாய், தன் கைப்பையை கீழே தவறவிட்டு கொஞ்சம் தாமதிப்பார். தாயைத் தேடும் மகள் எதிரே சுவரொட்டியில் காணப்படும் எயிட்ஸ் விளம்பரத்தைப் பார்ப்பதாக காட்சியமைக்கப்பட்டிருந்தது. இக்காட்சியின் நோக்கம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வைச் சொல்லத் தாய் தயங்கக் கூடாது என்பதுடன் அதற்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் பிரபல ஆங்கில சினிமா நடிகருடன் தென்னிந்திய சினிமா நடிகர்கள் கலந்துகொண்டு நடத்திய "ஹீரோஸ்" என்ற அமைப்பின் எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் காட்டினார்கள். அதில் கலந்து கொண்ட நடிகர்களும் நடிகைகளும் எழுதிக் கொண்டுவந்த அல்லது முன்பே தயார் செய்யப்பட்டக் கருத்துக்களைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இவர்களில் ஒருவர் கூட இனி தங்கள் சினிமாக்களில் "எயிட்ஸுக்குக்குக் காரணமான பாலுணர்வைத்தூண்டும் காட்சிகள் இடம் பெறா" என்றோ அல்லது "பாலுணர்வைத்தூண்டும் காட்சிகளில் நாங்கள் நடிக்க மாட்டோம்" என்றோ வாய் தவறியும் சொல்லவில்லை.

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு வந்த பிறகுதான் எயிட்சின் தீவிரம் உலக மக்களுக்கு உரைக்க ஆரம்பித்தது. மனித இனம் தோன்றியதிலிருந்து பாலுணர்வும், செக்ஸுக்கான தேவையும் இருந்தே வருகின்றது. அப்படி இருக்கும் போது கடந்த 20-30 வருடங்களில் மட்டும் ஏன் எயிட்ஸ் என்னும் கொடிய அரக்கன் விசுவரூபம் எடுத்தான்? என்று நாம் சிந்திக்காமல், ஆணுரை அணிந்து எயிட்ஸை கட்டுப்படுத்தலாம் என்ற ரீதியில் எயிட்ஸ் விழிப்புணர்வைச் செய்து வருகிறோம்.

ஆணுரை அணிந்தால் எயிட்ஸைக் கட்டுப்படுத்தலாம் என்பது முட்டாள்தனமான விழிப்புணர்வு என்பது என் கருத்து. முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரத்தில் ஆணுரைகளின் அறிமுகம் பரவலாக்கப்பட்ட பின்பும் எயிட்ஸ் அதிவேகமாகப் பரவிக் கொண்டுதானே இருக்கிறது? எயிட்ஸை ஒழிக்கவேண்டும் என்று கடந்த வருடங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களால் எயிட்ஸ் அரக்கனைக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்து விட்டன;ஏன்?

"புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு" என்று சிகரெட் பெட்டியில் விளம்பரப்படுத்திக் கொண்டே, சிகரெட் விற்பது போல்தான் உள்ளது எயிட்ஸ் விழிப்புணர்வு விளம்பரங்களும்! பாலியல் உணர்வுகளைத் தூண்டும் சினிமாக்களையும் சூழல்களையும் ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்தியும் இனி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது என்ற நிலையிலா உலகம் எயிட்ஸின் கொடும்பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது?

எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கங்களின்/விளம்பரங்களின் தற்போதைய நோக்கம் ஆணுரை அணிந்து முறையற்ற உறவு கொள்வதன் மூலம் எயிட்ஸைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலைக்கு தாழ்ந்து விட்டது. என்ன கொடுமையான விழிப்புணர்வு இது? "விழிப்புணர்வு" என்பதிலிருந்து "தற்காப்பு" என்ற சுயநல நிலைக்கு இறங்கி விட்ட எயிட்ஸ் விழ்ப்புணர்வு விளம்பரங்களால் என்ன பயன்? என்பதைக் காலம்தான் உணர்த்தும்!

தற்போதைய தேவை ஆணுரை அணிந்து தற்காலிகமாக எயிட்ஸை கட்டுப்படுத்தும் அலோபதி விழிப்புணர்வா? எயிட்ஸுக்கான காரணிகளையும் அழித்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்கும் ஹோமியோபதி விழிப்புணர்வா என்பதைச் சிந்தித்தால் எயிட்ஸை ஒழிக்கப் போதுமான விழிப்புணர்வு கிடைத்துவிடும்!


முறையற்ற இன்பம்! முடிவற்ற துன்பம்! எயிட்ஸ் ஒழிக! அதற்கான காரணிகள் அதனினும் ஒழிக!!
இக்கட்டுரை தமிழோவியம்.காம் ல் டிசம்பர்-05 வெளியானது. இக்கட்டுரை சம்பந்தமான பின்னூட்டங்களை http://www.tamiloviam.com/unicode/12010506.asp இல் காணலாம்.

Thursday, November 24, 2005

பண்டிகைகளும் நல்லிணக்கமும் -3

நிச்சயமாக மனிதன் நன்றி மறந்தவனாகவே இருக்கிறான்; மனிதருக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செலுத்தியவானாக மாட்டான். இவையெல்லாம் குர்ஆனிலும் நபி மொழிகளிலும் சொல்லப்பட்டுள்ள அறவுரைகள்.

சாதாரணமாக அருகிலிருப்பவர் தும்மியதற்கு "அல்ஹம்துலில்லாஹ்" (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!) என்று சொன்னவருக்கு "யர்ஹமுகல்லாஹ்" (அல்லாஹ் உனக்கு அருள் பாலிப்பானாக!) என்று பரஸ்பரம் நன்றி சொல்லிக் கொள்வதை இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது.

அதே போல் தமிழர் பண்பாட்டிலும் நன்றி செலுத்துவது தலையாய பண்பாடாக இருக்கிறது. செய்நன்றியறிதல் என்று திருக்குறளிலும் தனி அதிகாரம் உண்டு, இன்னும் பல தமிழர் இலக்கியங்களிலும் நன்றியின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நன்றி மறந்தவனை "நன்றி கெட்ட நாயே" என்று விளிப்பதன் மூலம் நன்றி செய்வதன் அவசியத்தை தமிழன் எந்த அளவு முன்னிலைப்படுத்தியுள்ளான் என்பது விளங்கும்.

தமிழில் "நன்றி" என்கிறோம். அதையே ஆங்கிலத்தில் (Thanks) தாங்ஸ் என்கிறோம். இந்தி/உருது/அரபியில் சுக்ரியா/சுக்ரன் என்கிறோம். இதே போல் அனைத்து மொழிகளிலும் நன்றிக்கு வெவ்வேறான வார்த்தைகள் உண்டு. சீனர்களும் ஜப்பானியர்களும் நன்றி என்று வாயளவில் சொல்வதோடு உடலை வளைத்து செய்கையாகவும் சொல்வர்.

உண்மையில் நன்றி என்பது என்ன? வாயாளவிலும் உடலளவிலும் சொல்லி விட்டால் உண்மையான நன்றியாகி விடுமா என்பதையும் அறிந்து கொண்டால் "நன்றி" செலுத்துவதற்கு இஸ்லாம் வரையறுத்திருக்கும் இலக்கணம் எல்லோருக்கும் பாரபட்சமின்றியும் அறிவுப்பூர்வமாகவும் உண்மையாகவும் இருப்பது புலப்படும்.

நன்றி என்பது ஒருவர் செய்த உதவிக்கு ஈடாக அதே அளவு மறு உதவி செய்வது அல்லது அதை விட அதிகமான உதவியைச் செய்வதாகும்.

மனிதர்களுக்குள் இப்படி பரஸ்பரம் உதவி செய்து கொள்வதை நன்றி என்று சொல்கிறோம். பொங்கல் திருநாளை தமிழர்கள் சூரியனுக்கும், பூமிக்கும், உழவனுக்கும், உழவுக்கு உதவியாக இருந்த மாட்டிற்கும் நன்றி செலுத்துவதாகச் சொல்கிறோம். இதை தமிழ் இந்துக்கள் கொண்டாடுவது போல் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஏன் கொண்டாடுவதில்லை என்று கேட்கின்றனர்.

கடவுளை (அல்லாஹ்வை)த் தவிர வணங்குவதற்குத் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இதனை ஏற்றுக் கொண்டால்தான் முஸ்லிம். படைத்து பரிபாலித்து, இறக்கச் செய்து பிறகு உயிர்த்தெழச் செய்பவன் அல்லாஹ்வே என்றும் அவனே செலவத்தையும், இன்பத்தையும் அதேபோல் சோதனைகளையும், துன்பத்தையும் தருபவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை.

பொங்கல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு உதவிய மழை, சூரியன், காளை மாடு ஆகியவற்றிற்கு இந்த நாட்களில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.

முதலாவது நாள் போகிப் பண்டிகை எனப்படுகிறது. இந்நாளில் மழையைத் தந்து அதன் மூலம் வளம்மிகு அறுவடைக்கு உதவிய முகில்களின் தெய்வமான இந்திரனுக்கு நன்றி கூறப்படுகிறது.இரண்டாம் நாளான தைப்பொங்கல் நாளில் சூரியனுக்கு பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. கானும் பண்டிகை அல்லது மாட்டுப் பொங்கல் எனப்படும் மூன்றாம் நாளில் உழுவதற்கு உதவிய மாட்டுக்கும் பாலை வழங்கும் பசுவுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறுவார்கள். (பார்க்க :
http://uyirppu.yarl.net/archives/000190.html )

பொங்கலை உழவுக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகக் கொண்டாடப்படும் பண்டிகை என்று சொல்லி விட்டு நம்மில் எத்தனை பேர் உழவர்களுக்கு சரியான கூலியை வழங்குகிறோம்? மாடுகளுக்கு நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப்படுத்துகிறோம். இதுவா உழவுக்கு உதவியவ்ர்களுக்கு வந்தனம் செய்யும் முறை?

உண்மையில் பொங்கலன்று மட்டும் நன்றி செலுத்துவதை விட இஸ்லாம் எல்லா நாளும் நன்றியுடையவர்களாக இருக்கச் சொல்கிறது. உதாரணமாக, உழைப்பவனின் வியர்வைத் துளி உலரும் முன் அவனுக்குறிய கூலியை வழங்கி விடுங்கள் என்பது நபிகள் நாயகத்தின் அருள் மொழி. மேலும் அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்

'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்)
நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:)
உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்)
அதற்கான நற்பலன் கிடைக்கும்''
என்று கூறினார்கள் (புகாரி-6009)

பொங்கல் தமிழர் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் அதை கொண்டாடும் முறை இந்துக்களின் வழிபாடாகவே இருக்கிறது. இஸ்லாம் மற்ற மதத்தவரின் வழிபாடுகளில் தலையிடுவதில்லை. தங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக இருக்கிறது என்ற காரணத்தால்தான் அவற்றைக் கொண்டாடுவதில்லையே தவிர காழ்புணர்வோ அல்லத் வேறு காரணங்களோ அல்ல.

Friday, October 28, 2005

பண்டிகைகளும் நல்லிணக்கமும் -2

பொங்கல், ஓணம்,புத்தாண்டுப் பண்டிகைகளைச் சொல்லலாம். இதை மற்ற மதத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் இவற்றைக் கொண்டாடததின் மூலம் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு எதிரானவர்கள் என்ற தோற்றம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என தனித்தனியாக கொண்டாடுவதை விட தமிழர்களாகிய நாம் பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி உலகின் மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாமே? என்ற
நியாயமான கருத்து முன்வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கின்றன. அதனைப் பின்பற்றிக் கொண்டு எம்மதமும் சம்மதம் என்பது வாயளவில் நல்ல சித்தாந்தமாக இருந்தாலும் உளப்பூர்வமாக தங்கள் மத நம்பிக்கைகளை
இது போன்ற பொதுவான பண்டிகைகளில் திணித்து விடுகின்றனர். இதை தவிர்க்கவும் முடியாது.

எப்படியெனில் படைத்தவனைத் தவிர படைப்புகளை வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலை. அதே நேரத்தில் மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவாக மாட்டான் என்பதும்
இஸ்லாத்தின் கோட்பாடு. இறைவனுக்குச் செலுத்தும் நன்றி வணக்க வழிபாடு சார்ந்ததாகவும், மனிதனுக்குச் செலுத்தும் நன்றி பொருள் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உழவர்களுக்கும், உழவில் ஈடுபடுத்தப்பட்ட கால்நடைகளுக்கும், விளைந்த பொருட்களையும் வணங்குவதை விட அவற்றைப் படைத்த அல்லாஹ்வை வணங்குவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாமியர்கள் பொங்கலைக் கொண்டாடவில்லை என்பதற்காக தமிழர் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று கருதக் கூடாது.

இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியை சொல்கிறது.

"உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு" (109:6)

என திருக்குர்ஆன் கூறுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள்
தங்கள் மதத்தின் படி நடப்பதை தடுக்கவோ/குறுக்கிடவோ கூடாது என்ற இக்கோட்பாட்டில் எவ்வித முரண்பாடும் இல்லை. இதை நடைமுறைப் படுத்தும்போது உண்மையான மத/சமூக நல்லிணக்கமும் கடை பிடிக்கப்படும்.

மற்றவர்களின் வழிபாட்டை தடுக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் சவூதியில் இந்துக்கள் கோவில் கட்டி வணங்குவதற்கும், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஜெபம் செய்யவும் அனுமதி
மறுக்கப்படுகிறதே என்ற குற்றச்சாட்டிற்கு, இஸ்லாம் எவ்விதத்திலும் காரணமில்லை, அது சவூதியின் அரசியலமைப்பும், சட்டதிட்டமும் காரணம் என்பதோடு மேற்கொண்டு விவாதிக்காமல், இந்தியாவில்/தமிழ்நாட்டில் எப்படி சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பது எனப் பார்ப்போம்.

மாமிசம் சாப்பிடும் முஸ்லிம்களுக்கு அண்டை வீட்டு இந்து, மாமிசம் அல்லது தீபாவளி, ஆயுத பூசை போன்ற பண்டிகைகளின் படைக்கப்பட்ட பலகாரங்களை அன்பாக கொடுத்த போதிலும் ஏற்பதில்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.

முஸ்லிம்கள், அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அறுக்கப்பட்ட உயிரிணங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. இந்த கட்டளையின் காரணமாகவே மற்றவர்கள் அறுப்பதை உண்ண மறுக்கின்றனரே தவிர காழ்புணர்வோ அல்லது வேறு ஜாதியக் காரணங்களோ அல்ல.

கடவுளுக்கு எந்தத் தேவையும் இல்லை. கடவுளுக்காக எந்த பொருளையும் படைக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் அடிப்படை. இதில் முஸ்லிம்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் படையல்
செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என இஸ்லாம் முஸ்லிம்களை வலியுறுத்துகிறது.

சைவம் சாப்பிடும் ஒருவர் எப்படி அசைவ உணவை ஏற்க மறுப்பாரோ அதே அளவுகோல்தான் முஸ்லிம்களுக்கும் வைக்க வேண்டும். அடுத்தவர் அன்பாக கொடுப்பதை ஏற்கவில்லை என்பதற்காக கொடுத்தவரை அவமதித்து விட்டார் என அர்த்தமல்ல. உண்மையில் சைவம் சாப்பிடுபவரிடம் அசைவ
உணவைக் கொடுப்பதுதான் அவமதிப்பு.

இந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டால், இஸ்லாம் தமிழர்களுக்கும் பிற சமயங்களுக்கும் எதிரானதல்ல என்ற உண்மை புலப்படும்.

ஆக சமூக/சமய நல்லிணக்கத்திற்கு அவரவர் தத்தம் வழிபாடுகளையும் வணக்கங்களையும் அடுத்தவரை பாதிக்காதாவாறு அமைத்துக் கொண்டால் மட்டுமே சாத்தியம்.

Monday, October 24, 2005

பண்டிகைகளும் நல்லிணக்கமும் -1

பண்டிகைகள் - அந்தந்த மத நம்பிக்கையாளர்கள் தங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சந்தோசமாகக் கொண்டாடப் படுவதற்காக மதங்கள் ஏற்படுத்திய வழிமுறை. கிறிஸ்துமஸ்,புத்தாண்டு, புனிதவெள்ளி என கிறிஸ்தவர்களும் தீபாவளி,ஆயுத பூசை என இந்துக்களும் ரம்ஜான், பக்ரீத் என முஸ்லிம்களும் ஒவ்வொரு வருடத்திலும் சில நாட்கள் கொண்டாடுகின்றார்கள்.

இவையல்லாமல் பொங்கல்,ஓணம்,யுகாதி போன்ற சமூக/இன ரீதியான பண்டிகளும் கொண்டாடப் படுகின்றன. அனைத்து மத பண்டிகைகளின் நோக்கமும் மக்கள் சந்தோசமாகவும் நன்றியுடையவர்களாகவும் இருக்க
வேண்டும் என்பதே.

உண்மையில் அனைத்து பண்டிகைகளும் மக்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கிறதா? என்று நடுநிலையாக சிந்திக்க வேண்டியது நம் கடமையாகும்.

முஸ்லிம்களின் பண்டிகைகளின் போது குர்பானியின் போது உணவுக்கு ஏற்ற கால்நடைகளை இறைவன் பெயரால் அறுத்து தானும் உண்டு, உறவினர், அண்டை வீட்டார் மற்றும் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். இது பசுவை தெய்வமாக வணங்குபவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை.

கிறிஸ்தவர்களின் பண்டிகையின்போது மது அருந்துதல், ஆண்-பெண் கட்டுப்பாடின்றி ஆடிப்பாடுதல் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு ஈடுபாடில்லை. அர்த்தமற்ற கேளிக்கைகளையும், அனாச்சாரங்களையும்
இஸ்லாம் அவர்களுக்கு தடுத்துள்ளதால் ஒரு சாராருக்கு மகிழ்சியான பண்டிகை இன்னொரு சாராருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.

இந்துக்களின் பண்டிகையின் போது செய்யப்படும் சில சடங்குகளும், மேட்டுக்குடி இந்துக்களில் சிலர் மது அருந்தியும் இன்னும் பிற கேளிக்கைகளிலும் ஈடுபட்டு தங்கள் பண்டிகளைகளைக் கொண்டாடுகின்றனர்.

இதுவும் இஸ்லாமியருக்கு ஏற்புடையதாக இல்லை. இப்படி ஒருவர் சந்தோசமாகக் கொண்டாடும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் இன்னொருவருக்கு கொண்டாட்டத்தையும் சந்தோசத்தையும் கொடுக்க முடியவில்லை.

சரி, அனைத்து மக்களும் பொதுவாக ஒரு பண்டிகையைக் கொண்டாடலாமே என்ற வாதம் நியாயமாகப் படலாம். பிற மத வழிபாடுகளற்ற அல்லது பிறர் மதக் கொள்கையுடன் ஒத்துவராத பண்டிகைகள் சாத்தியமா? எனப் பார்ப்போம்.

தொடரும்...

Thursday, October 20, 2005

அறிமுகம்

தமிழ் நெஞ்சங்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக!

தமிழ்மணத்தின் மூலம் "நல்லடியார்" என அறியப்பட்ட நான் <<எதிரொலி>> என்ற வலைப்பூவில் இஸ்லாம் மார்க்கம் பற்றியும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றியும் சில எழுதிய அவதூறுகளுக்கு விளக்கம் சொல்லும் கடமையில் எழுதி வந்தேன்.

எனது வலைப்பூ பதிவுகள் http://athusari.blogspot.com என்ற முகவரியில் செயல்பட்டு வந்த போழ்தும், தமிழ்மணம் நிர்வாகிகளின் புதிய விதிமுறைகள் மதம் சார்ந்த அல்லது துவேச கருத்துக்கள் சசத்தியமுள்ள வலைப்பூக்களை திரட்டுவதில்லை என்ற புதிய விதியால் எனது வலைப்பூவும் பட்டியலிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான வலைப்பூக்களும் பட்டியலிலிருந்து நீக்கப்படுள்ளன.

தள நிர்வாகிகளின் இத்தகைய கட்டுப்பாடு தேவையானது என்பதைச் சொல்லிக் கொள்ளும் இதே நேரத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மொழியால் தமிழன்! தேசத்தால் இந்தியன்! மதத்தால் இஸ்லாமியன்! உணர்வால் மனிதன். இதுதான் என் நிலைப்பாடு.

இணையத்தில் சாதாரண வாசகனாக இருந்த என்னை வேதனைப்படுத்தியது ஒன்று உண்டென்றால், இஸ்லாத்திற்கு எதிரான வலைப்பூக்கள். இதுவரை தமிழல்லாத மொழிகளில் அது போன்ற தளங்கள் உலகலாவிய அளவில் இயங்கி வந்தபோது எழாத வருத்தம் சக தமிழர்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்த முயலும் சில சக்திகளின் துவேச எழுத்துக்களால் எழுந்தது.

மத நம்பிக்கை என்பது மனித நல்வழிப்படுத்த தோன்றியவை என சொல்லும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்று, இதுவரையிலும் சகமனிதர்களுடன் நண்பணாய், அண்டை வீட்டுக்காரணாய், சக ஊழியனாய் இருந்து வருகிறேன். இனியும் இதில் மாற்றமிருக்காது.

என் நம்பிக்கையை சிலர் ஏளனப்படுத்தியதாலும் அவதூறாக எழுதியதாலும் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டி மட்டும் இஸ்லாம் சம்பந்தமாக எழுதி வந்தேன். நான் இஸ்லாமிய பிரச்சாரகனோ அல்லது எழுத்தாளனோ அல்ல. நான் அறிந்த உண்மைகளை பிறருக்கு புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்காகத்தான் எழுதி வருகிறேன்.

என் மதநம்பிக்கை தாக்கப்படும்போது, அதற்கு தகுந்த விளக்கம் கொடுக்காமல் சினிமா,அரசியல்,பொழுதுபோக்கு என்று என்னால் எழுத முடியவில்லை. முடியவில்லை என்று சொல்வதை விட எழுத விடவில்லை என்பதே உண்மை.

இனி என் மத நம்பிக்கைகளின் மீதான அதூறுகளுக்கு தமிழ்மணத்தில் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய விளக்கங்கள் அல்லாமல் பொதுவான சமய/சமூக சிந்தனைகளை
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த முடிவில் என் எழுத்தார்வம் மற்றும் இதுவரை பெற்ற தமிழிணைய நண்பர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல நோக்கமுமே என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி...